Picture3 (2)

மதிப்புறு பண்டம்

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அழகு மணிகள் ஆயிரக்கணக்கில்

கிடைக்கின்றன. அதிலும் கூட கொங்கு நாட்டு அகழ்வில் மிகுதியும் கிடைக்கின்றன.

கொடுமணலில் ஓர் ஈமச்சின்னத்தில் 2500 மணிகள் வைத்திருந்தனர். 900 மணிகள், 800

மணிகள், 750 மணிகள், 600 மணிகள் என எண்ணிக்கை மிகுந்த மணிகள் கொடுமணல்

ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன. கொடுமணல் வாழ்விடத்தில் இந்த அளவுக்கு

எண்ணிக்கையில் மணிகள் கிடைக்கவில்லை. அதனால் ஈமச்சின்னப் பொருள்கள் ஈகை அரிய

நன்கலம் (Prestigious goods) என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். இதுபற்றி ஷெரீன்

ரத்னாகரர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். மெசபடோமியா ஆட்சியாளர்கள் இறந்தபின்

புதைக்கும் போது இதுபோன்ற மதிப்புமிகு பண்டங்களை வைத்துப் புதைத்தனர். தங்கள்

கைவசம் அந்தப் பொருட்கள் இல்லையானாலும் மற்றவர்களிடமிருந்து பொருளைப் பறித்துக்

கொண்டுவந்து ஈமக்குழியில் வைத்துப் புதைப்பர். கொடுமணலில் கார்னீலியன் மணிகள்

மதிப்புறுப் பண்டங்களாக விளங்கின. ஏனெனில் அவை குஜராத்தில் இருந்து வந்தவை.

அவ்வாறே மெசபடோமியாவில் லேபீஸ் ரசுலீ என்னும் மணி வகை மதிப்புறு பண்டமாக

விளங்கியது. இவ்வகை மணி சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து அங்கு கொண்டு

செல்லப்பட்டவையாகும். இதுகொண்டு தங்கள் பகுதியில் கிடைக்காத பொருள்களே மதிப்புறு

பண்டங்களாக விளங்கின என்பது புலப்படும்.

Picture2 (1)

வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட இத்தகைய மதிப்புறுப் பண்டங்களே ஈகை அரிய

நன்கலம் எனப்பட்டது. அவை கொடையாக கொடுப்பதற்கு அரியவை. ஆயினும்

அவற்றையும் கொடையாக நல்குவது பண்டு சிறந்த மரபாய் இருந்தது. ‘புகழ் எனின்

உயிரையும் கொடுக்குவர்’ ஆகிய சான்றோர் பெருமக்கள் தாம் அரிதின் முயன்றுபெற்ற

மதிப்புறு பண்டங்களே ஈகையாகக் கொடுத்து அழியாப்புகழ் எய்தினர். அதியமான்

ஔவைக்கு ஈந்த நெல்லிக்கனி இதற்கு சான்றாகும்.

பண்டைய தமிழகத்தில் நால்வகைத் திணைகளிலும் இருந்த கனிமவளங்கள் சங்க

இலக்கியங்களில் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. கான நாடன் ஆளும் மலைப்பகுதியில்

யானைத் தந்தத்தைக் கானவர் எடுக்கின்ற செய்தி பின்வரும் பாடல் அடிகளால் விளங்கும்.

‘புலியொடு பொருந்த புண்கூர் யானை

நற்கோடு நயந்த அன்பில் கானவர்

விற்கழிபட்ட நாமப்பூசல்

உருமிடைக் கடியிடி கரையும்

பெருமலை நாடன் …………………..’ (நற்.65)

யானைத் தந்தம் மட்டுமன்றி, மணிக்கல், பொன், தந்த முத்து ஆகியவற்றையும்

பெறுவதற்கான இயற்கை வளத்தினைப் பெற்றது நாடன் ஆளும் மலைப் பகுதி. இந்தச்

செய்தியைப் பின்வரும் அகப்பாடல் விவரிக்கின்றது.

‘பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்

கண்பொருது இமைக்கும் தின்மணி கிளர்ப்பப்

வைந்நுதி வான்மருப்பு ஒடிய உக்க

தெண்ணீர் ஆலிகடுக்கும் முத்தமொடு

மூவேறுதாரமும் ஒருங்குடன் கொண்டு’ (அகம்.212)

மலையில் சிறுகுடிகளை உருவாக்கி உணவு தேடும் வாழ்க்கையிலிருந்து, உணவு உற்பத்தி

செய்யும் வாழ்க்கைக்கு மாறியதைப் பின்வரும் பாடல் வலியுறுத்தும்.

‘இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத

கருங்காற் செந்தினை கடியுமுண்டன’ (நற். 122)

‘கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கி

சிற்சில வித்திப் பற்பல விளைந்து

தினை கிளிகடியும் பெருங்கல் நாடன்’ (நற். 328)

நாடன் ஆளுகைக்குட்பட்ட மலைப்பகுதியில் திணை விளைவித்த செய்தி இதனால்

அறியப் பெறுகின்றது. நாடன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தினை, வரகு, மிளகு, கொள்ளு,

இஞ்சி, துவரை ஆகியவை பயிரிடப்பட்டன என்பதற்கு சங்க இலக்கியத்தில் பல சான்றுகள்

உள்ளன. இவை மட்டுமின்றி, தேக்கு, அகில் போன்ற மரங்களும் நாடன் ஆட்சிக்குட்பட்ட

பகுதியில் விளைந்தன. தேக்கு நிறைந்த பகுதியைத் தேக்கமல் என்று கூறுவர். தேக்கு, அகில்,

மிளகு, மணிக்கல், பொன், யானைத்தந்தம் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்

நிலை ஏற்பட்ட பின் அவற்றின் பொருளியல் சிறப்பு உணரப் பெற்றது. கால்நடை வளர்ப்பு

சமூக ஆக்கத்திற்குப் பயன்பட்டது. யானைத் தந்தம், கல்மணி, பொன் ஆகியன

மூவேறுதாரங்கள் என்று குறிக்கப்பெற்றன. நாடன் ஆட்சிக்குட்பட்ட பகுதி, வெளிநாடுகளுக்கு

ஏற்றுமதி செய்யப் பெறும் தகுதி வாய்ந்த பண்டங்களே உற்பத்தியாகும் பகுதியாக

விளங்கியது.

இவ்வாறு ஏற்றுமதி செய்ய தகுதிவாய்ந்த பொருட்களே சமூகத்தில் உற்பத்தி

செய்யப்பட்டன. மேலும் இத்தகைய தன்மை வாய்ந்த பொருட்கள் ஆட்சியாளர்களால்

மணவினை மூலமாகவும், காணிக்கையாகவும், போரினாலும், வாணிகத்தாலும் பெறப்பட்டு,

மதிப்புறு பண்டங்களாக பேணப்பட்டு செயற்கரிய செய்வார் தம் ஈமக்குழியில்

வைக்கப்பட்டன.

திணைப்பயிர்கள் அதிகம் விளையும் பகுதிகளில் நெல் மதிப்புறு பண்டமாக

கருதப்பட்டிருக்க வேண்டும். பொருந்தில் அகழ்வில் கிடைக்கும் நெல்லை நாம் இவ்வாறு தான்

கணிக்க வேண்டியுள்ளது. இங்கு கிடைக்கும் நூற்றுக்கணக்கான கண்ணாடி மணிகளை

இப்பகுதியில் கிடைக்காத அரிய பொருளாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறே தேக்கு, அகில், சந்தனம், தேன் முதலிய குறிஞ்சித் திணையான மலைப்பகுதியின்

கருப்பொருட்களும் பிற திணைகளில் மதிப்புறு பண்டங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க

வேண்டும். கரூரில் கிடைக்கும் பொன் அணிகலன்களும் யவன வாணிகத்தால் சிறப்பாக

ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. யவனர்கள் தமிழகத்

துறைமுகத்து முத்துக்களை வாணிகத்தின் மூலம் விரும்பிப் பெறுவதால் அதிகமாக அவர்கள்

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக பயணநூல் ஒன்று புலம்புவதையும் நாம் நோக்க

வேண்டும். தம் நாட்டில் கிடைக்காத அரிய முத்துக்களை அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்த

யவன நாட்டின் பண்டைய நிலை அதுவே. பொன்னோடு வந்து கறியொடு பெயர்ந்த இலக்கிய

வரியும் இதனை உறுதிப்படுத்துகிறது.

குறிப்புதவி நூல்கள்

1. கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர; அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சை. 1994

2. கா. ராஜன், பொருந்தில் அகழாய்வு

3. Shereen Ratnagar, Encounters The Westerly Trade of the Harappa Civilization,

Oxford University Press, Delhi, 1981

4. ராம் சரண் சர்மா, பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் – சில

தோற்றங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1989

5. அகநானூறு, நற்றிணை (எட்டுத்தொகை நூல்கள்)

 

முனைவர் கோ. சசிகலா, மதுரை

Leave A Comment